தங்கலான் விமர்சனம்

தங்கலான் படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் இது வழக்கமான பா. ரஞ்சித் படமில்லை என்ற விமர்சனத்தை சொல்வதை பார்க்கிறோம். ஆம் இது வழக்கமான பா. ரஞ்சித் படமில்லை !! அதனை விட ஆழமான அழுத்தமான படம் !!

தான் யார் என்பதை ஆரானுக்கு புரிய வைக்க ஆராத்தி செய்யும் களேபரங்களால் ஒரே காட்சி மூன்றுமுறை வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தான் யார் என்பதை ஆரான் விளங்குகையில் தான் நமக்கும் இந்தக் காட்சி கோர்வைகள் புரிகிறது.

நிலமென்பது மனிதனின் அடிப்படை தேவையும் உரிமையுமாகும்… அதையும் விட மேலாக அந்த நிலம் தான் அவனின் அடையாளம். இதுதான் படத்தின் மையக்கருத்தும்.

நிலமில்லா மனிதர்கள் படும் அல்லல்களையும் , நிலத்தை ஏப்பம் விடும் ஜமீன்களில் அட்டகாசத்தையும் இரண்டு மூன்று காட்சிகளில் தத்ரூபமாக திரையில் காட்சிப்படுத்தி விட்டார்.

வர்ணங்கள் அடிப்படையில் பேதம் பார்க்கும் இழிநிலையால் நிலக்கிழார்கள் தலைமுறை தலைமுறை கடந்து எவ்வாறு அடிமையாக மாறி , ஊருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டார்கள் என்பதையும் ஒரு காட்சியில் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

ரஞ்சித் படங்களில் ஒரு சில காதல் காட்சிகள் உயிரோட்டமாக இருக்கும். அந்த வகையில் தங்கம் தேடிச் செல்லும் முன் பார்வதிக்கும் விக்ரமுக்கும் இடையிலான அந்தக் காட்சியும் வசனமும் அந்த நிலத்தின் காதலை அருமையாக சொல்லியிருக்கும். போற வரைக்கும் உன் சூடு தெரியட்டும் 👌👌👌

கோலார் தங்க வயலின் வரலாற்றை இரத்தமும் சதையுமாக சொல்லிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான காட்சிகளில் ஆயிரத்தில் ஒருவன் , பரதேசி போன்ற படங்களின் சாயல் தெரிகிறது. அதேபோல படத்தின் முதல் பாதியின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை !! இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் …

இந்த படத்தை பார்க்க முக்கியமான காரணங்கள் !!

விக்ரம் எனும் அரக்கனின் நடிப்பு . மனுஷன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி தன்னையே மாற்றி வைத்திருக்கிறார். படத்தை முழுவதுமாக தோளில் சுமந்திருக்கிறார்.

பா. ரஞ்சித் எனும் கலைஞனின் அட்டகாசமான கதைக்களம் !! படக்காட்சிகளில் தான் பின்பற்றும் அரசியலையும் சித்தாந்தாத்தை ஆங்காங்கே குறியீடுகளாக காட்சிப்படுத்தும் ரஞ்சித், புத்தர் சிலை , நீலப்பொடி , நிலம் , மக்களின் வாழ்க்கை முறை என தங்கலானிலும் குறியீடுகளை வைத்துள்ளார் !!

GV பிரகாஷ் எனும் அசுரனின் மிரட்டும் இசை !! டைட்டில் கார்டில் தொடங்கும் இசை கடைசி காட்சி வரை அதகளப்படுகியிருக்கிறார். எப்பா GV தயவுசெய்து இசையில் மட்டும் கவனம் செலுத்துப்பா !! நமக்கு நடிப்பு வேண்டாம்….

பூ பார்வதி , பசுபதி என அனைவரும் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள். ஒளிப்பதிவாளரும் ஒப்பனை கலைஞர்களும் போட்டிக் போட்டுக்கொண்டு உழைத்திருக்கிறார்கள்.

கடைசிக் காட்சியில் விக்ரம் கையிலிருப்பது தங்கம் அல்ல !! அது அவர்களின் நிலமும் அடையாளமும் !!

பா. ரஞ்சித்தையும் அவரின் அரசியலையும் எதிர்க்கும் So Called இயக்குனர்கள் இந்தப் படத்தின் ஒரு காட்சியை போல கூட எடுக்க முடியாது.

தன்னுடைய நிலத்திலேயே அடிமைப்பட்டு கிடந்து , அதனை மீட்கப் போராடும் அனைவரும் தங்கலான்களே !!

தங்கலான் படத்தை ஏளனம் செய்யும் முட்டைகள் இது போல் ஒரு படத்தை எடுத்து காட்டுங்கள். தங்கலான் உலக சினிமா